இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் தலைவராக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது முன்னாள் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் கேப்டனுக்கு வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய செய்தியில் வாழ்த்து மட்டுமல்லாமல் யுவியின் ஆதங்கமும் வெளிப்பட்டுள்ளது.
யுவராஜ் சிங்கின் வாழ்த்து செய்தியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சிகரமான செய்தியாகும். முன்னாள் கேப்டனான இவரை நாட்டின் பிரதமராக்கினாலும் தவறில்லை. இவரின் தலைமையில்தான் அணியில் மிகப்பெறும் மாற்றம் ஏற்பட்டது. அதுபோலவே தற்போது அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.
மேலும், யோ-யோ டெஸ்ட் நடந்திருக்கும் போது இவர் தலைவராக இருந்திருந்தால் தற்பொழுது பலரின் கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசமாக இருந்திருக்கும் என சூசகமாக தெரிவித்திருந்தார்.
யுவராஜ் சிங்கின் ட்விட்டர் பதிவிற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மறு ட்வீட் செய்துள்ளார். அதில், உன்னால் தான் இந்தியா இருமுறை உலகக்கோப்பையை கைப்பற்றியது. விளையாட்டுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது. என்றைக்கும் நீ தான் என்னுடைய சூப்பர் ஸ்டார். எப்பொழுதும் உனக்கு கடவுள் துணை நிற்பார் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இருவரின் ட்விட்டர் பதிவுகளும் சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: #LaLiga: ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டிக்கான தேதி இதுதான்...