விஜய் ஹாசாரே உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 317 ரன்களை குவித்தது. குறிப்பாக, அந்த அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் சத்தீஸ்கர் அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக பறக்கவிட்டார்.31 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட அவர் எட்டு பவுண்டரி, ஆறு சிக்சர்கள் என 81 ரன்கள் விளாசினார்.
இவரது அதிரடி ஆட்டத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த நெட்டிசன்கள், இந்திய அணி நான்காவது வரிசையில் பேட்டிங் செய்வதற்கான வீரரை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறது. அதேசமயம், சூர்யகுமார் யாதவ் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் 31 பந்துகளில் 81 ரன்கள் அடித்துள்ளார். இதனால், நான்காவது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவர் என சமூகவலைதளங்களில் கருத்துத் தெரிவித்தனர்.
இதற்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், உள்ளூர் போட்டிகளில் அதிகமாக ரன்கள் அடித்தும் சூர்யகுமார் யாதவ் ஏன் இன்னும் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாகவில்லை எனத் தெரியவில்லை. தொடர்ந்து கடினமாக உழைப்பை வெளிப்படுத்துங்கள், அதற்கான பலன் நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு கிடைக்கும் என பதிவிட்டிருந்தார்.
சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடியும், மும்பை அணி அந்தப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 72 முதல் தர ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை இரண்டு சதம், 12 அரைசதம் என 2081 ரன்களை அடித்துள்ளார். அதேபோல, 85 ஐபிஎல் போட்டிகளில் 7 அரைசதம் உட்பட 1544 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் நீண்ட நாட்களாக இந்திய அணிக்கு இருக்கும் நான்காவது வரிசை பிரச்னையை சரிசெய்ய சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஆதார் இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் - எமோஷன் காட்டும் ஹர்பஜன்