இந்திய கிரிக்கெட் அணியில் 2007 முதல் 2011 வரை மூன்று விதமான ஃபார்மெட்டுகளிலும்(Format) சிறந்த வீரராகத் திகழ்ந்தவர் கவுதம் கம்பீர். கங்குலியின் கேப்டன்ஷிப் மூலம் இந்திய அணியில் எண்ட்ரி தந்த இவர், ஆரம்பக் காலக்கட்டத்தில் சற்றுத் தடுமாறினார். 2007 டி20 உலகக்கோப்பைத் தொடர்தான் கவுதம் கம்பீருக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஆம், அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கவுதம் கம்பீர் இடம்பெறவில்லை.
இதனால், தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என நினைத்தாக கம்பீர் தெரிவித்தார். ஒருவேளை அவர் அப்போதே இந்த முடிவை எடுத்திருந்தால், இந்திய அணிக்கு இரண்டு உலகக்கோப்பை கிடைத்திருக்குமா என்றால் அது சந்தேகம்தான். ஏனெனில், இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை, 2011இல் நடந்த ஒருநாள் தொடர் உலகக்கோப்பை ஆகிய இரு கோப்பைகளையும் வெல்ல முக்கிய காரணமே கம்பீர்தான்.
2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றார். இதில், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட்டான இவர், பின் அந்தத் தொடரின் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அந்த அளவிற்கு தனது பேட்டிங் ஃபார்மை மெருகேற்றினார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் யூசுஃப் பதான், உத்தப்பா, யுவராஜ் சிங், தோனி ஆகியோர் சொதப்பினாலும் கவுதம் கம்பீர் சிறப்பாக விளையாடி 75 ரன்களை விளாசினார். இந்தத் தொடர் முடிந்தவுடன் கம்பீருக்கென தனி இடம் இந்திய அணியில் கிடைத்தது.
2009, 2010 ஆகிய ஆண்டுகளில் கம்பீர் - சேவாக் ஜோடி ஓப்பனிங்கில் பட்டயைக் கிளப்பியது. ஒருநாள், டெஸ்ட், டி20 என மூன்று ஃபார்மெட்டுகளிலும் ஓப்பனிங்கிலும் மூன்றாவது வரிசையிலும் சிறப்பாக ஜொலித்தார். கவுதம் கம்பீரின் ஆகச் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் என்றால் அது நியூசிலாந்து அணிக்கு எதிராக அடித்த 137 ரன்கள்தான்.
நெப்பியர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி ஃபாலோ - ஆனை பெற்றது. இந்த சமயத்தில் சேவாக் வந்த வேகத்தில் அவுட்டானாலும், மறுமுனையில் கம்பீர் டிஃபெண்ட் செய்து சிறப்பாக விளையாடினார். கிட்டத்தட்ட 643 நிமிடங்கள் (10 மணி நேரம் 43 நிமிடங்கள்) 436 பந்துகள் எதிர்கொண்டு 137 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது போராட்டத்தால் அப்போட்டி டிரா ஆனது. கம்பீரின் இந்த இன்னிங்ஸைப் பார்த்து இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் வியந்து பாராட்டினார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில்தான் கவுதம் கம்பீர் இந்திய ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 275 என்கிற கடின இலக்கை இலங்கை அணி நிர்ணயித்தது. முதல் ஓவரிலேயே சேவாக் ஆட்டமிழந்து இந்திய அணி தடுமாறத் தொடங்கியபோது, களமிறங்கினார் கம்பீர்.
இதையடுத்து சச்சினும் மலிங்காவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து கையை விரித்தார். இருப்பினும் கவுதம் கம்பீர், கோலி, தோனி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து 97 ரன்கள் அடித்தார். இதுநாள் வரை அவரது சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்றே கூறலாம். கவுதம் கம்பீர், தோனி ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றது. 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், இந்த இரண்டு தொடர்களின் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார் கம்பீர்.
ஆனால், இர்பான் பதான், தோனி ஆகியோரால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைக்கவில்லை. இதனால், அந்த இரண்டு இன்னிங்ஸும் அன்டர்ரெட்டட்(Underrated) இன்னிங்ஸாகதான் பார்க்கப்படுகிறது.
"சேவாக் ஆட்டமிழந்த பிறகு நான் பேட்டிங் செய்ய தயாராகவே இல்லை. அப்போதுதான் நான் எனது பேடினை கட்டிக்கொண்டிருந்தேன். இறுதிப் போட்டியின்போது என் மூளையில் எந்த ஒரு சிந்தனையும் ஓடவில்லை. ஒருவேளை அந்தப் போட்டியில் எனக்கு பேட்டிங் செய்ய எப்போது வாய்ப்பு கிடைக்கும் என நான் நினைத்திருந்தால், ஏகப்பட்ட பிரஷ்ஷர்கள் எனக்கு ஏற்பட்டிருக்கும்.
இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ஓய்வறையில் இருந்த அனைத்து இந்திய வீரர்களுக்கும் இருந்தது. சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது இந்திய அணி 1983இல் உலகக்கோப்பை வென்றது. பின்னர் உலகக்கோப்பை வெல்லும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது" என கம்பீர் 2017இல் தெரிவித்திருந்தார்.
அவரது ஆசை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் ஆசையும் 2007, 2011இல் நிறைவேறியது. 2007 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு தோனி இந்திய அணியின் சிறந்த கேப்டனாக விளங்குவார் என கம்பீர் தெரிவித்திருந்தார். அவர் கூறியதைப் போல பின்நாட்களில் தோனி சிறந்த கேப்டனாகத் திகழ்ந்தார். இந்திய அணி இரண்டு உலகக்கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்த கம்பீர் இன்று 38ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று தற்போது பாஜக எம்பியாக இருக்கும் அவருக்கு கிரிக்கெட் நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கம்பீர்!