கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இந்த கோடையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்கும் என்பதால், பார்வையாளர்களின்றி இத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடரை ஜூன் 4ஆம் தேதி தொடங்கலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், தங்களது வீரர்களை வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,
‘ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். அதில் நாங்கள் விமானம் மூலம் இங்கிலாந்து சென்று விளையாடுவதில் தெளிவான, பாதுகாப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் எங்களுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இங்கிலாந்து சென்று விளையாடுவது பாதுகாப்பானது என்று நாங்கள் கருதினால் மட்டுமே அங்கு செல்வோம். மற்றபடி எங்களது அணி வீரர்களையும் யாரும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பன்டெஸ்லிகா: வெர்டர் ப்ரெமனை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற பேயர் லெவர்குசென்!