ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்துவருகிறது. இதன் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்று நடந்த இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங்கின்போது, நட்சத்திர ஆல்-ரவுண்டர் வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் களத்திலிருந்து வெளியேறினார்.
இதுகுறித்து போட்டியின் முடிவுக்கு பின் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' எல்லீஸ் பெர்ரியின் காயம் பற்றி முழுமையாக அறிய முடியவில்லை. அவர் களத்திலிருந்து பாதியில் வெளியேறியது துரதிர்ஷ்டவசமானது. அவர் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்பாரா என்பது பற்றி இன்னும் சில நாள்களில் தெரியவரும்.
கடந்த சில வருடங்களாக அவர் அணியில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உள்ளார். அவரது இடத்தை நிச்சயம் யாராலும் ஈடுசெய்ய முடியாது. ஆனால் அணி அவரை மட்டும் நம்பி இல்லை. ஆஸ்திரேலிய அணியிலிருக்கும் 15 பேரும் தவிர்க்க முடியாத வீராங்கனைகள்தான். அனைத்து ஆட்டங்களிலும் அதே அணியோடு களமிறங்கபோவதில்லை. பெர்ரியின் காயத்தை பற்றிய விவரம் தெரிய வந்தபின், அவரது இடத்தில் யார் களமிறங்குவார்கள் என்பது சில நாள்களில் தெரியவரும்'' என்றார்.
நட்சத்திர ஆல்-ரவுண்டர் வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு இன்று இரவு ஸ்கேன் செய்யப்படவுள்ளது. ஸ்கேன் பரிசோதனைகளை மருத்துவர்கள் ஆய்வு செய்த பின்னரே அவரின் காயம் பற்றி தெரியவரும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மெக் லானிங் - ரேச்சல் ஹைன்ஸ் பார்ட்னர்ஷிப்பில் ஆஸி. வெற்றி!