2010ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐசிசியால் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது ஆறாவது மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நாளை நடைபெறும் இதன் இறுதிப்போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்தியா அணி, மெக் லானிங் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இதுவரை நான்கு முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி நாளையப் போட்டியில், ஐந்தாவது முறை கோப்பை வெல்லுமா அல்லது இந்திய அணி முதன்முறையாக கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் இதற்கு முன்னதாக நடைபெற்ற இறுதிப் போட்டிகள் குறித்து பார்க்கலாம்.
எல்லீஸ் பெர்ரியால் ஆஸி.க்கு கிடைத்த முதல் உலகக்கோப்பை (2010):
2010ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், 107 ரன்கள் இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டன.
அப்போது, எல்லீஸ் பெர்ரி வீசிய கடைசிப் பந்தை சோபி டிபைன் ஸ்ட்ரைட் டிரைவ் ஷாட் ஆடினார். மின்னல் வேகத்தில் உருண்டுவந்த பந்தை எல்லீஸ் பெர்ரி, தனது வலது காலில் தடுத்ததால், பந்து பவுண்டரிக்குச் செல்லவில்லை. இதனால், எல்லீஸ் பெர்ரியின் உதவியால் ஆஸ்திரேலிய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த போட்டியிலிருந்து தான் 'மகளிர் கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்' எனப் பெயரெடுக்கத் தொடங்கினார் எல்லீஸ் பெர்ரி.
இரண்டாவது முறைத் தொடர்ந்து கோப்பையை த்ரில்முறையில் வென்ற ஆஸி. (2012)
2012ஆம் ஆண்டில் இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் 143 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன.
ஆனால், 11 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸி.க்கு கிடைத்த ஹாட்ரிக் உலகக்கோப்பை (2014):
2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிட்டத்தப்பட்ட இப்போட்டி 2012 மகளிர் டி20 உலகக்கோப்பையின் ரிமேட்சாகவே பார்க்கப்பட்டது. கடந்த இரண்டு முறை ரன்களை டிஃபெண்ட் செய்து வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, இம்முறை சேஸிங்கில் 106 ரன்களை 15ஆவது ஓவரிலேயே எட்டியது.
இறுதிப் போட்டியில் மெக் லானிங் 30 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். எல்லீஸ் பெர்ரி நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, 13 ரன்களை மட்டுமே வழங்கினார். இதனால், மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி, தொடர்ந்து மூன்றுமுறை (ஹாட்ரிக்) டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இதன்மூலம், மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி, ஆடவர் அணியைப் போலவே உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் வெற்றிபெற்று சாதனைப் படைத்தது.
ஆஸி.யின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வெஸ்ட் இண்டீஸ் (2016):
2016இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தத் தொடர், வெஸ்ட் இண்டீஸ் ஆடவர் அணிக்கும் சரி, மகளிர் அணிக்கும் சரி மறக்கமுடியாத வகையிலேயே அமைந்தது. 149 ரன்கள் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 19.3 ஓவர்களில் எட்டி, தனது முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது.
மீண்டும் தொடங்கிய ஆஸி.யின் ஆதிக்கம் (2018):
எட்டு ஆண்டுகளுக்கு முன் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மோதிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மீண்டும் 2018ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் பலப்பரீட்சை நடத்தியது. 2014ஆம் ஆண்டில் சொதப்பியதை போலவே இம்முறையும் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 105 ரன்கள் தான் எடுத்தது.
ஒரேயொரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் 2014ஆம் ஆண்டில் எட்டு விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி, 2018இல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகள் எடுத்தது மட்டுமின்றி பேட்டிங்கிலும் 33 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு நான்காவது டி20 உலகக்கோப்பைத் தொடரைப் பெற்றுத்தந்தார், ஆஷ்லி கார்ட்னர்.
சரித்திரம் படைக்கப்போவது இந்தியாவா அல்லது ஆஸி.யா?:
மேற்குறிப்பிட்ட ஐந்து இறுதிப் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காக இடம்பெற்றிருந்த எல்லீஸ் பெர்ரி, காயம் காரணமாக நாளைய இறுதிப் போட்டியில் முதல்முறையாக விலகியுள்ளார். இதனால், அவரது இழப்பு இந்திய அணிக்கு சாதகமாக இருக்குமா அல்லது எல்லீஸ் பெர்ரி இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய அணி, தனது சொந்த மண்ணில் கோப்பையை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நாளை மெல்போர்னில் இந்திய நேரப்படி நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்குகிறது.
இதையும் படிங்க: பருந்தான ஊர்க்குருவி... ஷஃபாலி வர்மா...!