இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடிவந்தவர் அம்பத்தி ராயுடு. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு பதிலாக தமிழ்நாடு ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டும் விதமாக அம்பத்தி ராயுடு தேர்வுக் குழுத்தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தை விமர்சித்தார். பின்னர், ஜூலை மாதம் அவர் தீடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், அவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் வி.ஏ.பார்த்தசாரதி கோப்பைக்கான ஒருநாள் தொடரில் கிராண்ட்ஸ்லாம் சிசி அணிக்காக விளையாடிவருகிறார். நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜோலி ரோவர்ஸ் சிசி, கிராண்ட்ஸ்லாம் சிசி அணிகள் மோதின. சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜோலி ரோவர்ஸ் அணி 216 ரன்களுக்கு சுருண்டது.
இதைத்தொடர்ந்து, 217 ரன்கள் இலக்குடன் விளையாடிய கிராண்ட்ஸ்லாம் அணி 43ஆவது ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது. இதில், ராயுடு 56 பந்துகளில் நான்கு பவுண்ட்ரிகள், இரண்டு சிக்சர் என 47 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றப் பின் அவர் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
"நான் எனது ஓய்வு முடிவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கவில்லை. உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக நான் நான்கு ஆண்டுகள் கடுமையாக பயிற்சி செய்தேன். ஆனால், இதற்கான பலன் கிடைக்காததால்தான் இந்த முடிவை எடுத்தேன். நிச்சயம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவிற்காக சிறப்பாக விளையாடி, அந்தத் தொடரில் கம்பேக் தருவேன். அதற்காக நான் எனது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் தயாராகிவருகிறேன்" என்றார்.
2017 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ராயுடு, காயம் காரணமாக அந்தத் தொடரிலிருந்து விலகினார். பின் 2018இல், சிஎஸ்கே அணியில் இடம்பெற்று சிறப்பான பேட்டிங்மூலம் கம்பேக் தந்தார். அதேபோல, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், தற்போது விளையாடிய முதல் போட்டியில் 47 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம், இவர் கம்பேக் தர சென்னை உதவியுள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.