கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் வெகு விமர்சையாக நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கரோனா வைரஸ் சூழல் சரியான பின் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால் செப்டம்பர் மாதத்தில் ஆசியக் கோப்பை டி20 தொடர் நடக்கவுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலர் வாசிம் கான் பேசுகையில், ''கரோனா பாதிப்புகள் செப்டம்பர் மாதத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டால் நிச்சயம் ஆசியக் கோப்பை டி20 தொடர் செப்டம்பரில் நடக்கும். அதை நாங்கள் நிச்சயமாக கூறுகிறோம். ஐபிஎல் தொடருக்காக ஆசியக் கோப்பை தொடரை ஒத்தி வைப்பது நியாயமல்ல.
ஆசியக் கோப்பை தொடரை நவம்பர் - டிசம்பர் மாதங்களுக்கு ஒத்தி வைக்க பேச்சுகள் எழுவதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அது எங்களுக்கு சரிப்படாது. ஒரு கிரிக்கெட் வாரியத்திற்காக ஆசியக் கோப்பை தொடரை ஒத்தி வைப்பது சரியான நடவடிக்கை இல்லை. அதற்கு எங்களின் ஆதரவு இருக்காது'' என்றார்.
செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக கரோனா சூழல் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் ஐசிசி தலைமை நிர்வாகிகள் பங்கேற்றக் கூட்டத்தில், பிசிசிஐ சார்பாக ஐபிஎல் தொடர் பற்றி எவ்வித கேள்வியும் கேட்கப்படவில்லை. கரோனா வைரஸ் காரணமாக ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடர் ஒத்தி வைப்பது பற்றி ஆலோசிக்கப்படவில்லை.
ஒருவேளை கரோனா வைரஸ் பிரச்னை காரணமாக டி20 உலகக்கோப்பையை ரசிகர்களின்றி விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டால், ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் 15 முதல் 20 மில்லியன் டாலர்கள் வரை வருவாய் இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைவன் ஒருவனே: சச்சின்... சச்சின்...!