நியூசிலாந்தில் கரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வந்ததையடுத்து, அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மைதானங்களில் பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை 13 முதல் 16 வரை லிங்கனில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர்கள், தற்போது ஜூலை 26 வரை மவுண்ட் மாங்கானியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பயிற்சியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் பங்கேற்றார். இதனிடையே கரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டதால், மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதி அளித்துள்ளார்.
தொடருக்கான அட்டவணை உள்ளிட்ட இறுதி முடிவுகள் இன்னும் ஏழு அல்லது பத்து நாட்களுக்குள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். அதேசமயம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திட ஒப்புதல் வழங்குமாறு பிசிசிஐ மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் என்ற செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது குறித்து பேசிய கேன் வில்லியம்சன், "ஐபிஎல் தொடரில் விளையாடுவது எப்போதும் சிறந்த விஷயம்தான். ஆனால் இந்த தொடர் நடத்துவதற்கான இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தொடர் நடைபெறும் இடம் அட்டவணை தெளிவான திட்டமிடலும் சிறப்பான ஒருங்கிணைப்பும் தேவை" என்றார்.