2011இல் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உலகக்கோப்பை ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன்மூலம், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என 22 ஆண்டுகளாக இருந்த சச்சினின் கனவு அன்று நனவானது.
இந்நிலையில், இந்திய அணி உலகக்கோப்பை வென்ற பின் சச்சின் நடனமாடியதாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அன்றைய நாள்தான் சச்சின் நடனமாடுவதை முதன்முதலில் பார்த்தேன். தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாமல் அவர் நடனமாடினார். அவரது நடனம் எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும்.
அன்றைய இரவு எனக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்துடன்தான் நான் தூங்கினேன். அடுத்தநாள் காலையில் எழுந்த போது எனது கையில் பதக்கம் இருந்த தருணம் மிக அற்புதமாக இருந்தது. உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பதே எங்களது கனவாக இருந்தது. அந்த கனவு நனவானதைத் திரும்பி பார்க்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.
உலகக்கோப்பையை என் கையில் ஏந்திய தருணம் மிகவும் ஸ்பெஷலாக இருந்தது. அந்த தருணத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நான் அனைவரின் முன்பும் முதன்முறையாக அழுதேன்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு நிதி திரட்ட இந்தியா - பாக் தொடர் நடத்தலாம் - அக்தரின் ஐடியா!