ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனில் பந்துவீச்சாளர்களின் நோ-பால்களை மட்டும் கண்காணிக்க தனியாக ஒரு அம்பயரை நியமிக்கும் முடிவை நேற்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் அறிவித்தனர். நோபாலால் எழும் பிரச்னைகளை தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மும்பை பந்துவீச்சாளர் மலிங்கா கடைசிப் பந்தில் நோபால் வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடுவர்கள் அதற்கு நோபால் வழங்காததற்கு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதுபோன்ற ஒருசில முடிவுகள் காரணமாகவே தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நோ பால் அம்பயர் முறை குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், "மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் அனைத்தையும் பார்ப்பது கடினமான ஒன்றுதான். அதற்காகத்தான் டிவி ரீ-ப்ளே உள்ளது. மேலும் கடந்தாண்டு பெங்களூரு - மும்பை போட்டியிலும் நோபால் தெளிவாகத் தெரிந்தது.
எனவே பிற முடிவுகளை டிவி ரீ-ப்ளேயில் பார்க்கும் மூன்றாவது நடுவர் ஏன் இந்த நோபாலையும் பார்க்கக் கூடாது. இதுவே எளிய வழிமுறை என்று நினைக்கிறேன். நான்காவதாக நோபால் அம்பயர் என்று ஒருவர் வைக்கப்பட்டால் நிச்சயம் அவர் அளிக்கும் முடிவுகள் தெளிவாகத்தான் இருக்கப்போகிறது. இது எதையும் தாமதப்படுத்தப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் கொஞ்ச நேரத்தில் முடிவு எடுத்துவிடுவார்கள்" என்றார்.
மேலும் படிக்க: சும்மாவே ஆட்டம் வெறித்தனமா இருக்கும் இனி சொல்லவே வேண்டாம்... ஐபிஎல்லில் புதிய விதிமுறை