உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்திலே அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் வழக்கம் போல விரைவாக ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த லிவிஸ் மற்றும் ஹோப் இருவரும் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த இணையை ரஷீத் கான் பிரித்தார்.
அடுத்து வந்த ஹெட்மைர் 39 ரன்களும் பூரான் 58 ரன்களும் கேப்டன் ஹோல்டர் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் அணித் தரப்பில் அதிகபட்சமாக ஷட்ரன் 2 விக்கெட்களை எடுத்தார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் அடித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆட வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தாலும் இக்ரம் அலியும் ரஹ்மத் ஷாவும் நிதானமாக ஆடி எதிரணி வீரர்களுக்கு அச்சமூட்டினர்.
ஆனால் இந்த இணையை ப்ராத்வெய்ட் பிரித்தார். ரஹ்மத் 62 ரன்னிலும் அலி 86 ரன்னுக்கும் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் அணி பக்கம் திரும்பியது. அதன்பின் வந்த நஷிபுதீன் மற்றும் ஆப்கன் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி வெற்றி பெற்றது. சிறப்பாகப் பந்து வீசிய ப்ராத்வெயிட் 4 விக்கெட்டை கைப்பற்றினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.