நியூசிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தவர் கிரிகோர் ஜான் பார்க்லே. இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடன் பேசிய பார்க்லே, உலக கிரிக்கெட்டில் இந்தியா அளிக்கும் பங்களிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும், இருப்பினும் ‘பிக் த்ரீ’ (Big Three) கோட்பாட்டை என்னால் ஆதரிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பார்க்லே, “என்னைப் பொறுத்தவரை மூன்று பெரிய வாரியங்கள் (பிக் த்ரீ) என்பதெல்லாம் கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் எல்லாருமே முக்கியமானவர்கள் தான். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். பெரிய தொடர்களை நடத்துவது, நிறைய வருவாய் உருவாக்குவது போன்ற சில விஷயங்களைச் சில பெரிய தேசங்களால் தர முடியும். ஆனால் அதற்காகத் பிக் த்ரீ வாரியங்கள் என்றெல்லாம் நினைக்க முடியாது.
மேலும் உலக கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியாவின் பங்களிப்பானது பலமடங்கு உயர்ந்துள்ளது. அதனால் அவர்களை ஐசிசி குறைத்து மதிப்பிடக்கூடாது. மேலும் இந்தியா போன்ற நாடுகளுடனான தொடரின் போது ஐசிசிக்கு அதிகப்படியான வருவாய் கிடைக்கிறது. மேலும் ஐசிசியின் வருவாய்யை பெருக்கவேண்டு மெனில் நாம் மகளிர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இன்னும் ஒரு கிரிக்கெட் அணி பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் என்கிற தொடரை அடுத்தாண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது நடந்தால் பங்குபெறும் அனைத்து நாடுகளுக்கும் வருவாய் ரீதியில் அதிக லாபம் கிடைக்கும் . எனவே இந்த சூப்பர் சீரிஸுக்கு ஐசிசி அனுமதி அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பார்க்லேவின் இந்தக் கருத்துக்குப் பிறகு, இத்தொடர் நடக்குமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
பிக் த்ரீ கோட்பாடு:
கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளுடைய கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் ‘பிக் த்ரீ’ என்ற கோட்பாட்டை உருவாக்கினர். அதன் படி இந்த மூன்று நாடுகளும் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களின் மூலம் ஐசிசிக்கு அதிகபடியான வருவாய் கிடைத்தது. மேலும் விழுக்காடு அடிப்படையில் இந்தியா 20.3 விழுக்காடும், 4.4 விழுக்காடு இங்கிலாந்து, 2.7 விழுக்காடு ஆஸ்திரேலியாவும் வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறு காயங்களுடன் தப்பித்த ஃபார்முலா 1 வீரர் ரோமெய்ன் க்ரோஸ்ஜீன்...!