நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நூலிழையில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதனால் இம்முறையும் பஞ்சாப் அணியின் ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்தது.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா, ஒவ்வொரு முறையும் கேப்டன், பயிற்சியாளர்களை மாற்றுவதால் பஞ்சாப் அணி பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது எனத் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய வாடியா, "ஒவ்வொரு முறையும் புதிய கேப்டன், புதிய அணியைத் தேர்வுசெய்வது சில சமயங்களில் உதவியாக அமைந்தாலும், பெரும்பாலும் இழப்பையே தந்துள்ளது. இதனால் அடுத்துவரும் சீசன்களில் இத்தவறுகளை பஞ்சாப் அணி செய்ய விரும்பவில்லை. மாறாக நடுவரிசையை பலமாக்கும் முயற்சியில் மட்டுமே ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ளோம்.
ஏனெனில் நாங்கள் எண்ணியதைப்போல சர்வதேச வீரர்கள் எங்களுக்குப் பலனைத் தரவில்லை. மேலும் தொடக்க வீரர்கள் ராகுல், அகர்வால், கெய்ல், பூரான் ஆகியோர் பங்களிப்பு அணிக்குப் பெரும் பலமாக அமைந்திருந்தது.
அதனால் இம்முறை கேப்டன், பயிற்சியாளரை மாற்றுவதற்குப் பதிலாக நடுவரிசை வீரர்களை மாற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் ஆறாம் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.