கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலக நாடுகள் பலவும் மிகவும் அசாதாரண சூழலைச்சந்தித்து வருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று எதிர்ப்புக்கு நிதி திரட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் சோயப் அக்தர் பரிந்துரைத்தார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சுனில் கவாஸ்கர் என பலரும் இதனை சாத்தியமில்லாத காரியம் என்றும், நலநிதி திரட்ட வேண்டிய நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இல்லை என்றும் பதிலளித்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷ்சன் மணி கூறுகையில், நாம் பல இழப்புகளை சந்தித்துள்ளோம். ஆனால் நாம் ஒருபோதும் இந்தியாவைப் பற்றி சிந்தித்தோ, திட்டமிட்டதோ கிடையாது. தற்போது ஏற்பட்டுள்ள சூழலையும் நாம் அவர்கள் இல்லாமல் கையாளவேண்டும். நாம் உயிர்வாழ்வதற்கும் அவர்கள் நமக்கு தேவையில்லை என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய மணி, இந்தியா விளையாட விரும்பவில்லை என்பதால், அவர்கள் இல்லாமல் திட்டமிட வேண்டும் என்பது எனக்கு தெளிவாகவுள்ளது. இதற்கு முன்பே பாகிஸ்தானுடன் ஓரிரு முறை விளையாடுவதாக இந்தியா வாக்குறுதி அளித்தது. ஆனால் இறுதி நேரத்தில் ஒன்றுமில்லா காரணங்களைக் கூறி அதிலிருந்து பின்வாங்கியது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நான் சொன்னது கபில்தேவிற்குப் புரியவில்லை - அக்தர் பதிலடி!