விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் ஏ & பி பிரிவில் இடம்பிடித்துள்ள கர்நாடகா அணி சத்தீஸ்கர் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற சத்தீஸ்கர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கர்நாடகா அணியின் தொடக்க ஆட்டகாரர் கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி அரை சதமடித்தார். அவர் ஆறு பவுண்டரிகள், ஒரு சிக்சர் உள்பட 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கர்நாடக அணியின் கேப்டன் மனிஷ் பாண்டே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.
மனிஷ் பாண்டே 118 பந்துகளை எதிர்கொண்டு ஏழு சிக்சர்கள், ஐந்து பவுண்டரிகள் உள்பட 142 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்தது. சத்தீஸ்கர் அணி சார்பில் புனீத், ஷசன்க் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன் பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சத்தீஸ்கர் அணி பிரசித் கிருஷ்ணா, ஸ்ரேயாஸ் கோபாலின் அபார பந்துவீச்சினால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் சத்தீஸ்கர் அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் கர்நாடகா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி சதமடித்து அணியை வெற்றிபெறச்செய்த கர்நாடகா கேப்டன் மனீஷ் பாண்டே ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே ஆகியோர் ஃபார்மில் இல்லாத காரணத்தினால் இந்திய அணியிலிருந்து ஒதுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கே.எல். ராகுல் மூன்று விதமான சர்வதேச போட்டிகளுக்கும் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கினார். மனிஷ் பாண்டே இந்திய ஒருநாள் அணியில் நான்காவது வீரராக களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாண்டவமாடிய தினேஷ்... கைகொடுத்த ஷாருக்...தமிழ்நாடு நான்காவது வெற்றி!