ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டின் உயரிய மதிப்பாக கருதப்படும் ஆலன் பார்டர் பதக்கம் இரண்டு நாள்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் ஆலன் பார்டர் பதக்கத்திற்கு வார்னர் தகுதியானவர் தானா என்ற கேள்விகள் எழுந்தது.
33 வயதாகும் வார்னர் கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடினாலும், இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் மொத்தமாகவே 95 ரன்கள் தான் எடுத்தார். அதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடந்த பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது ஃபார்மிற்கு திரும்பினார். ஆனால் ஆஷஸ் தொடரின்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்னிங்ஸ்களை ஆடிய ஸ்டீவ் ஸ்மித், ஆஷஸ் தொடரைக் கைப்பற்ற முக்கியக் காரணமாக திகழ்ந்த கம்மின்ஸ், லயன், ஸ்டார்க் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என பல்வேறு பதிவுகள் வந்துள்ளன.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் பேசுகையில், ''ஆலன் பார்டர் பதக்கத்திற்கான இறுதி முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், லயன் ஆகியோர் கடந்த ஒரு வருடத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர்.
சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும்போது ரன் எடுப்பதையும் அந்நிய மண்ணில் ஆடும்போது ரன் எடுப்பதையும் ஒரே நிலையில் பார்க்கமுடியாது. அந்நிய மண்ணில் சிறப்பாக ஆடும்போது அதற்கான மதிப்பை நிச்சயம் கொடுக்கவேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால் ஆலன் பார்டர் பதக்கம் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படுவது. கடந்த 21 வருடங்களாக அப்படித்தான் நடந்துவருகிறது. அதனால் இனி வாக்களிக்கும் முறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தவேண்டும்.
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கோ அல்லது நான்கு மாதங்களுக்கோ ஒருமுறை வாக்கெடுப்பு நடத்தி, இறுதியாக ஒன்றாக வைத்து எண்ணவேண்டும். ஆனால் இந்த ஆண்டுக்கான ஆலன் பார்டர் பதக்கத்திற்கு டேவிட் வார்னர் தகுதியானவர் தான். ஏனென்றால் ஆஷஸ் தொடரைத் தவிர்த்து பார்த்தால் நிச்சயம் மிகச்சிறந்த கிரிக்கெட்டை மக்களுக்கு வழங்கியுள்ளார். ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தின் சிறந்த ஆட்டத்தால் தான் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பதக்கம் கைமாறியுள்ளது'' என்றார்.
ஆலன் பார்டர் பதக்கத்தை டேவிட் வார்னர் 2016, 2017 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்கனவே பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து தடை விதிக்கப்பட்டதற்கு பிறகு 2019ஆம் ஆண்டு கிரிக்கெட்டிற்கு திரும்பிய நிலையில், மீண்டும் ஆலன் பார்டர் விருதை வென்றுள்ளார். அதோடு ஆஸ்திரேலியாவின் சிறந்த ஆடவர் டி20 கிரிக்கெட்டர் என்ற விருதையும் வார்னர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 4 ரன்களில் 3 விக்கெட்டுகள்... 6 பந்துகளில் கைமாறிய கோப்பை... ஆஸி.யிடம் வீழ்ந்த இந்தியா