ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் நான்கு ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்சாக்னே மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னருடன் கைகோர்த்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தினார். நேற்றைய ஆட்டநேர முடிவு வரை இருவரது விக்கெட்டுகளையும் அவர்களால் வீழ்த்த முடியவில்லை.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்தமுறை லபுஸ்சாக்னே விக்கெட்டை இழந்தாலும், வார்னர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஆஷஸ் தொடரில் வார்னர் விளையாடியபோது, சொல்லிக்கொள்ளும்படி ரன்கள் அடிக்காமல் க்ரீஸுக்கு வந்த உடன் பெவிலியன் திரும்பி ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்தார். குறிப்பாக, வார்னர் ஸ்டூவர்ட் பிராடு பந்தில்தான் அதிக முறை தனது விக்கெட்டை இழந்திருந்தார். தற்போது அவர் முச்சதம் அடித்ததன் மூலம் அனைவரது வாயையும் அடைத்துள்ளார்.
முச்சதம் நிறைவு செய்த வார்னர் 335 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா 400 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது. இன்னும் சிறிது நேரம் களத்தில் வார்னர் இருந்திருந்தால் லாராவின் சாதனையை முறியடித்திருப்பார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: அரை மீசை, அரை தாடியுடன் காட்சியளிக்கும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் - ஏன் தெரியுமா?