இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலமாக ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இளம் வீரர்களுக்கு விருதுகள், உதவித்தொகை வழங்கிவருகிறார். தற்போது, இந்த அறக்கட்டளை மூலம் வசிப்பிடமின்றி திரியும் நாய், பூனை போன்ற விலங்குகளை பாதுகாப்பாக தங்க வைக்கும் ’விலங்குகளுக்கான காப்பகத்தை’ தொடங்கவுள்ளார்.
இதற்காக, விவால்டிஸ் அனிமல் ஹெல்த், அவாஸ், வாய்ஸ் ஆஃப் ஸ்ட்ரே அனிமல்ஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் கோலியின் அறக்கட்டளை கைகோர்த்துள்ளது. இந்த காப்பகங்கள் மலாட் மற்றும் போய்சரில் அமைக்கப்பட்டு, அவாஸ் அமைப்பின் கண்காணிப்பில் நடத்தப்படும்.
மலாட்டில் அமைக்கவுள்ள காப்பகம் தற்காலிகமானது. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் விலங்குகள் குணமடைந்த பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்படும். ஆனால் போய்சரில் நிரந்தரமான காப்பகம் அமைக்கப்படவுள்ளது. இங்கு உடல் குறைபாடுகள் உள்ள விலங்குகள் பராமரிக்கப்படும். இந்தக் காப்பகத்திற்காக செயல்படவிருக்கும் பிரத்யேக ஆம்புலன்ஸுக்காக விராட் கோலி நிதியுதவி செய்கிறார்.
இது குறித்து கோலி கூறுகையில், “தெருக்களில் வசிக்கும் விலங்குகளுக்கு பாதுகாப்பான வசிப்பிடத்தை அமைப்பது எங்களது கனவு. இந்த திட்டத்தை விவால்டிஸ் மற்றும் அவாஸுடன் இணைந்து செயல்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரே மாதிரியான எண்ணங்களுடைய மனிதர்களுடன் செயல்படுவதால் இந்த விலங்குகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உதவியாகவுள்ளது” என்றார்.