இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) அரசியலமைப்பை லோதா குழு மறுசீரமைக்கும் போது, வட்டி மோதல் (conflict of interest) என்பது கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த நிர்வாகத்துக்கு கடுமையாக போராட வேண்டிய ஒரு பகுதி என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
இதன் காரணமாக தற்போதைய பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி உட்பட சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தங்களின் பதவிகளை கைவிட வேண்டியிருக்கிறது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் பிற வணிக நிறுவனங்களில் தலைமை பதவி வகிப்பதாகவும், இதனால் அவர் லோதா குழுவின் பரிந்துரைகளை மீறியுள்ளதாகவும் மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா, பிசிசிஐ-இன் நன்னெறி அலுவலர் டி.கே.ஜெயினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து குப்தாவின் மின்னஞ்சல் பதிவில், "இந்திய உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பி.சி.சி.ஐ விதி 38 (4) ஐ வெளிப்படையாக மீறிய விராட் கோலி, ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்கிறார். அதன்படி, அவர் விதி எண்- 38 (4) (அ)வின் படி அணியின் வீரராகவும், விதி எண் 38 (4) (ஓ)வின் படி ஒப்பந்த நிறுவனத்தின் பதவியிலும் நீடித்து வருகிறார். எனவே, அவர் தனது ஒரு பதவியை கைவிட வேண்டும்.
மேலும், 21.08.18 தேதியிட்ட பி.சி.சி.ஐ அரசியலமைப்பின் படி, விதி எண் 38 (4)இன் படி விராட் கோலி தனது பதவியில் ஒன்றை கைவிடுமாறு வெளியான உத்தரவை, உடனடியாக நிறைவேற்றுமாறு பிசிசிஐ-இன் நெறிமுறை அலுவலரை கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், விராட் கோலி, அமித் அருண் சஜ்தே ஆகிய இரு இயக்குநர்கள் கொண்ட விராட் கோலி ஸ்போர்ட்ஸ் எல்எல்பி, மற்றும் விராட் கோலி, அமித் அருண் சஜ்தே, பினாய் பாரத் கிம்ஜி ஆகிய மூன்று உரிமையாளர்களைக் கொண்ட கார்னர்ஸ்டோன் வென்ச்சர் பார்ட்னர்ஸ் எல்.எல்.பி. நிறுவனத்துடன் கோலி செயல்பட்டு வருவதையும் சஞ்சீவ் குப்தா தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.