கிரிக்கெட்டின் ரன்மிஷினாக திகழ்பவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் ஆவரேஜ் 50க்கும் அதிகமாக வைத்திருக்கும் ஒரே வீரர் போன்று பல சாதனைகளைக்கு சொந்தக்காரராக விளங்குகிறார்.
ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை அடுத்து, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி. இதில், சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இவர் இறுதியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடினார். அதில், இவர் 7 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 282 ரன்களை அடித்திருந்தார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது.
இவரது அடுத்தப்படியாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 913 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் புஜாரா 881 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
அதேபோல், சிறந்த அணிகளுக்கான பட்டியலில் இந்திய அணி 113 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 111 புள்ளிகளுடனும், மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி 108 புள்ளிகளுடனும் இடம் பிடித்துள்ளன.