2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி கோப்பையை செளராஷ்டிரா அணி முதன்முதலாகக் கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் முன்னணி வீரர் ஷெல்டன் ஜாக்சன் இருந்தார். கடந்த இரண்டு ரஞ்சி டிராபி தொடரிலும் 800 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளார். இவரது பேட்டிங்கிற்கு தனது ஃபிட்னெஸ்தான் காரணம் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், '' 2013ஆம் ஆண்டின்போது ஆர்சிபி அணிக்காக ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அப்போது விராட் கோலியுடன் நேரம் செலவிட முடிந்தது. அப்போது அவர் ஃபிட்னெஸிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை அறியமுடிந்தது. செளராஷ்டிரா அணியில் சிக்ஸ் பேக் உடல் வைத்திருக்கும் ஒரே வீரர் நான்தான். அதற்கு விராட் கோலி மட்டுமே இன்ஸ்பிரேஷன்.
நான் எப்போதும் உடற்பயிற்சி கூடத்தில் கடினமாக பயிற்சிகள் செய்வேன். அதற்கான பலன் கிடைக்கவே இல்லை. கடந்த ஆண்டுவரை நான் எல்லா வகையான உணவையும் எடுத்துவந்தேன். அதையடுத்துதான் எனது உடற்பயிற்சி நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி உணவினை எடுத்துக்கொள்கிறேன்.
கிரிக்கெட் நன்றாக ஆடுவதற்கு திறமை இருந்தால் போதும் என நினைத்திருந்தேன். ஆனால் திறமையுடன் அதீத ஃபிட்னெஸும் முக்கியம் என்பது இப்போதுதான் தெரிகிறது. நான் நன்றாக விளையாடுவதற்கு எனது ஃபிட்னெஸ் மட்டுமே காரணம்.
எனக்கு 33 வயதாவதால் இந்திய அணியில் இடம் கிடைக்காது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன்'' என்றார்.
தற்போது அகமதாபாத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஷெல்டன் ஜாக்சன் பணிபுரிந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஞ்சிக் கோப்பை: சரித்திரம் படைத்த செளராஷ்டிரா அணி!