நாட்டில் வளர்ந்துவரும் திறமையான கிரிக்கெட் வீரர்களைக் கண்டறியும் வகையில் சி.கே. நாயுடு தொடர், விஜய் மெர்சன்ட் தொடர், வினோ மன்காட் உள்ளிட்ட தொடர்கள் நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான வினோ மன்காட் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.
இதில், குவாலியர் நகரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ்நாடு அணி, மகாராஷ்டிரா அணியுடன் மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணியில் ஏ.ஏ. பவார் சதம் விளாசியதால், அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 269 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில் கேப்டன் பிரதேஷ் ரஞ்சன் பால், அர்ஜுன் பி மூர்த்தி ஆகியோர் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். இதனால், தமிழ்நாடு அணி 49.3 ஓவர்களிலேயே ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அபாரமாக பேட்டிங் செய்த பிரதேஷ் ரஞ்சன் பால் 109 பந்துகளில் எட்டு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 106 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில் தமிழ்நாடு அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தத் தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன்மூலம் தமிழ்நாடு அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என எட்டு புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவுள்ள மற்றொரு லீக் போட்டியில் தமிழ்நாடு அணி, மத்தியப் பிரதேச அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.