கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் தொடங்குவதாக இருந்த ஐபிஎல் டி20 தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்களும் தங்களது நேரத்தை குடும்பத்துடனும், சமூக வலைதளங்களிலும் செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷிகர் தவான் இருவரும் இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடினர். இதில் ஷிகர் தவான், இந்திய அணியின் தொடக்க வீரராக வலம் வந்த முரளி விஜய்யை மிகச்சிறந்த பண்புடையர் என்றும், அவர் சிறந்த நண்பர் என்றும் பாராட்டியுள்ளார்.
இது குறித்து தவான் கூறுகையில், 'முரளி விஜய் ஒரு மிகச் சிறந்த பண்புடையவர். அதை அவர் களத்திலிருந்தாலும் சரி, களத்திற்கு வெளியே இருந்தாலும் சரி ஒரே குணமுடையவர். ஆட்டத்தின் போது அவரை புரிந்துகொள்வது மிகவும் கடினமானதாக இருக்கும். அனால் அவர் அதையும் தனது பண்பிற்கு ஏற்றவாறு மாற்றும் ஆற்றலுடையவர்.
![முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7353010_viajy.jpg)
அவருடன் தொடக்க வீரராக களமிறங்குவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். மேலும் நாங்கள் இருவரும் எங்களால் இயன்றதை இந்நாட்டிற்கு தந்துள்ளோம். தற்போது வரையிலும் நாங்கள் சிறந்த நண்பர்களாக இருந்துவருகிறோம். நிச்சயமாக நாங்கள் மீண்டும் சந்தித்து எங்களுடைய நேரத்தை செலவிடுவோம்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஒருநாள் போட்டியில் முற்சதம் விளாசிய முதல் ஜோடி! #Onthisday