இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடைபெற்ற 2ஆம் சுற்று போட்டியில் கேரளா அணி உத்தரப் பிரதேசம் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய உத்தரப் பிரதேசம் அணியின் கோஸ்வாமி, பிரியம் கார்க், அக்ஸ்தீப் நாத் ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் இன்னிங்ஸ் முடிவில் உத்தரப் பிரதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களை எடுத்தது. அணியில் அதிகபட்சமாக அக்ஸ்தீப் நாத் 68 ரன்களையும், பிரியம் கார்க் 57 ரன்களையும், கோஸ்வாமி 54 ரன்களையும் எடுத்தனர். கேரளா அணி தரப்பில் ஸ்ரீசாந்த் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கேரளா அணிக்கு ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த உத்தப்பா 81 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சச்சின் பேபி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச்செய்தார்.
இதனால் 48.5 ஓவர்களில் கேரளா அணி வெற்றி இலக்கை அடைந்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேசம் அணியை வீழ்த்தியது. கேரளா அணி தரப்பில் ராபின் உத்தப்பா 81 ரன்களையும், சச்சின் பேபி 76 ரன்களையும் எடுத்தனர்.
இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: எந்த பந்தை உபயோகிப்பது என்ற ஆலோசனையில் பிசிசிஐ!