இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 14) தொடங்கியது.
முன்னதாக இலங்கை சென்ற இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அங்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையின் முடிவில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் மொயின் அலிக்கு இருப்பது உருமாறிய கரோனா வைரஸ் என தெரியவந்துள்ளது. இத்தகவலை இலங்கை சுகாதார துறை துணை இயக்குநர் ஹேமந்தா ஹெர்த் உறுதி செய்துள்ளார். இதனால் இலங்கையிலும் உருமாறிய கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதன் காரணமாக வருகிற ஜனவரி 21ஆம் தேதி தொடங்க இருந்த சர்வதேச விமான சேவைக்கு மீண்டும் தடை விதிப்பது குறித்து இலங்கை அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: தாய்லாந்து ஓபன்: இரண்டாம் சுற்றோடு வெளியேறிய இந்திய இணை!