கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவிருந்த 13ஆவது ஐபிஎல் டி20 தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இப்பெருந்தொற்றால் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதேசமயம் நாட்டின் தற்போதைய சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளதால், இந்தத் தொடரை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐயின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதனிடையே, ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்திட இலங்கை கிரிக்கெட் வாரியமும், ஐக்கிய அரபு அமீரகமும் விருப்பம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஐபிஎல் தொடரை எப்போது வேண்டுமானாலும் எங்களது நாட்டில் நடத்த நாங்கள் தயார் நிலையில் இருப்பதாக துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியின் கிரிக்கெட் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் சல்மான் ஹனிஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானமும், ஐசிசி அகாடமியும் ஐபிஎல் தொடரை நடத்த தயார் நிலையில் உள்ளன. இங்கு மொத்தம் ஒன்பது ஆடுகளங்கள் உள்ளதால் குறுகிய நாட்களுக்குள் அதிகமான போட்டிகளை நடத்திட முடியும். நாங்கள் எந்த போட்டிக்கான அட்டவணை தயார் செய்யாததால் ஆடுகளங்கள் புதிதாகவே உள்ளன" என்றார்.
முன்னதாக 2014இல் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது முதல் பாதி ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.