யு-19 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்து சூப்பர் லீக் காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பாச்செஃப்ஸ்ட்ரோமிலுள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கைத் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 62, அன்கோல்கர் 55 ரன்கள் அடித்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரவி பிஷ்னோய் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 233 ரன்கள் எடுத்தது.
234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பவுலர்கள் ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தனர். முதல் ஓவரிலியே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா அணி முதல் ஐந்து ஓவருக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஃபேனிங் - விக்கெட் கீப்பர் ரோவ் பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய ஃபேனிங் அரைசதத்தை பூர்த்தி செய்து 75 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரோவ் 21 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய ஸ்காட் 35 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவரில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய கார்த்திக் தியாகி 4, ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளை கைபற்றினர். 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்து வீசி, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட கார்த்தி தியாகிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.