கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்கர்ஸ்களால் ஹேக் செய்யப்பட்டுவருகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய சிஎஸ்கே வீரருமான வாட்சனின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்ப்பட்டதை அவரது ரசிகர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, இவரது ட்விட்டர் பக்கம் சரிசெய்யப்பட்ட நிலையில், தற்போது இவரது இன்ஸ்டாகிராம் கணக்கையும் ஹேக்கர்கள் ஹேக் செய்து சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான சட்டவிரோதப் புகைப்படங்களுக்காக அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலில் எனது ட்விட்டர் கணக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது. இப்போது எனது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது இதை சரிசெய்ய இன்ஸ்டாகிராம் மிக விரைவாக செயல்பட வேண்டும். அதற்கான தீர்வைக் காண நீண்ட நேரமாகிறது" எனப் பதிவிட்டிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கு உடனடியாக சரிசெய்யப்பட்டது. ஆனால், இன்ஸ்டாகிராம் கணக்கு மட்டும் ஏன் இன்னும் சரி செய்யப்படாமல் இருக்கிறது என்றும் கேள்வி ஏழுப்பினார். பின்னர், சிறிது நேரம் கழித்து வாட்சனின் இன்ஸ்டாகிராம் கணக்கு சரிசெய்யப்பட்டது.
இதை தெரிவிக்க வாட்சன் தனது ட்விட்டரில், ”ஹேக் செய்யப்பட்ட எனது இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி சரிசெய்ய வேண்டும் என எனக்கு சொல்லித் தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று நான் பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன். இறுதியில், இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வை இன்ஸ்டாகிராம் விரைவாக வழங்கியது” எனப் பதிவிட்டார்.
இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும், இப்போட்டியில் வாட்சன் முட்டியில் ஏற்பட்ட ரத்தக் காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.