வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை 69 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆன்டிகுவாவில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல். ராகுல் ஹோல்டரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் வந்த புஜாராவும் 6 ரன்களில் நடையைக் கட்டினார். அதனைத் தொடர்ந்து அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி அணியின் ரன்கணக்கை உயர்த்தத் தொடங்கினார். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அகர்வால் 55 ரன்களிலும், கோலி 76 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
![பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹனுமா விஹாரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4203221_hanuma-vihari.jpg)
அதன்பின் அஜிங்கியா ரஹானே மற்றும் விஹாரி ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் ஸ்கோர் மீண்டும் உயரத்தொடங்கியது. பின் ரஹானே 24 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதிரடியாக ஆடிய ஹனுமா விஹாரி அரைசதமடிக்க, மறுமுனையில் ரிஷப் பந்த், ஜடேஜா என விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணமே இருந்தன.
அதன்பின் களமிறங்கிய இஷாந்த் சர்மா, விஹாரியுடன் ஜோடிசேர்ந்து ரன்வேட்டையில் ஈடுபட்டார். கடந்த போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை தவறவிட்ட விஹாரி, நேற்று தனது முதல் டெஸ்ட் சத்ததை பூர்த்திசெய்தார். அவரைத் தொடர்ந்து இஷாந்த் சர்மாவும் டெஸ்டில் தனது முதல் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இந்திய அணி 140 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து 416 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் விஹாரி 111 ரனகளும், கோலி 76 ரன்களும், இஷாந்த் சர்மா 57 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
![ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மகிழ்சியில் ஜஸ்ப்ரிட் பும்ரா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/ec3vatxwkaaplod_2608newsroom_1566800560_21.jpg)
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜஸ்ப்ரிட் பும்ராவின் அசாத்திய பந்துவீச்சினால் விக்கெட்டை இழந்தது. அதிலும் குறிப்பாக பும்ரா தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து எதிரணியை திணறடித்தார். இறுதியில் 9 ஓவர்களை மெட்டுமே வீசிய பும்ரா, 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் முடிவில் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜஹ்மர் ஹாமில்டன் 2 ரன்களுடனும், ராகீம் கார்ன்வால் 4 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.