இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பிப்ரவரி 05ஆம் தேதி தொடங்குகிறது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்து, நட்சத்திர விடுதியில் ஒரு வாரகாலம் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் கரோனா அச்சுறுத்தலினால் சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா தளர்வுகளின் அடிப்படையில் சென்னையில் பிப்.13ஆம் தேதி நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ இன்று (பிப்.01) அறிவித்துள்ளது.
அதேபோல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் மூன்றாவது, நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கும் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐயின் இந்த அறிவிப்பால், ஓராண்டிற்கும் மேலாக மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைக் காணாமல் இருந்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: தூக்கம் இல்லை மனம் நிறைவாக இருக்கிறது - 'வாமிகா' படத்தை வெளியிட்ட 'விருக்ஷா'