VijayHazare: விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே பெங்களூருவில் நேற்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெங்களூருவில் உள்ள எம்.ஏ.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு அணி சத்திஸ்கர் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சத்திஸ்கர் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, 35 ரன்களுக்குள்ளாகவே அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அமந்தீப் காரே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தத் தொடங்கினார். சிறப்பாக விளையாடிய அமந்தீப் 78 ரன்களை எடுத்து அசத்தினார்.
இதன் மூலம் சத்திஸ்கர் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. கர்நாடகா அணி சார்பில் கௌஷிக் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கர்நாடகா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல், படிக்கல் இணை அபாரமான தொடக்கத்தை கொடுத்தது. இதில் அதிரடியாக விளையாடிய படிக்கல் எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய மயங்க் அகர்வால், ராகுலுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் கர்நாடகா அணி 40 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 229 ரன்களை எடுத்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
கர்நாடகா அணி சார்பில் கே.எல். ராகுல் 88 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நாளை நடைபெறவுள்ள விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி கர்நாடகாவை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: #VijayHazare: தமிழ்நாடு பந்துவீச்சில் தடுமாறிய குஜராத்