உலகம் முழுவதும் கோவிட்-19 நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில், ஒழுக்கத்தைப் பற்றி பேசும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 241 ரன்கள் எடுத்தார் என்ற உதாரணத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் பிரையன் லாரா மேற்கோள் காட்டியுள்ளார். சிட்னியில் 2004ஆம் ஆண்டு இந்தப் போட்டி நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 241 ரன்கள் எடுத்த அந்த ஆட்டத்தை பார்த்தால், வாழ்க்கையில் எதையும் எதிர்த்துப் போராடத் தேவையான ஒழுக்கத்தை நாம் அனைவரும் கற்றுக்கொள்ளலாம். புகழ்பெற்ற இந்தக் கிரிக்கெட் விளையாட்டை விளையாடிய மிகச் சிறந்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர்.
அதிலும் மிகத் திறமையானவர் டெண்டுல்கர் என்று இன்ஸ்டாகிராம் பதிவில் லாரா தெரிவித்துள்ளார். லாராவின் இப்பதிவின் மூலம் கிரிக்கெட் விமர்சகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையில், லாரா, சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரில் சிறந்த வீரர் யார் என்பதைத் தீர்மானிக்கும் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
டிராவில் முடிந்த அந்த சிட்னி டெஸ்ட் விளையாட்டில் டெண்டுல்கர் 436 பந்துகளில், 241 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 705 என்ற மகத்தான ஸ்கோரைப் பதிவு செய்ய உதவியது.
அப்போட்டியில் டெண்டுல்கரின் ஒழுக்கம், மன உறுதியை ஸ்டீவ் வாக் பாராட்டியிருந்தார்.