ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், நேற்று இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில், காயம் மற்றும் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நியூசிலாந்து அணியில் ஐந்து மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, கேப்டன் வில்லியம்சன், மிட்சல் சாண்ட்னர், ஹென்றி நிக்கோலஸ், டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் என ஐந்து வீரர்களுக்கு பதிலாக ஜீத் ரவால், கிளென் ஃபிலிப்ஸ், மேட் ஹென்றி, டோட் ஆஸ்டில், வில்லியம் சோமர்வில் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 454 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, மார்னல் லபுசானே 215 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் நியூசிலாந்து அணி இரண்டாம் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து வீரர் டாம் பிளண்டல் 34 ரன்களிலும், டாம் லாதம் 26 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இதனிடையே, நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின் 11ஆவது ஓவரின்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டது. தனது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் அடித்த ஷாட்டை தடுக்க ஹென்றி முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பந்து அவரது இடதுகை கட்டை விரலில் பலமாக தாக்கியதால் காயம் ஏற்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து பவுலிங் செய்த அவர் 32 ஓவர்கள் வீசி டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இதனிடையே, இவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவரது இடதுகை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. ஏற்கனவே காயம் காரணமாக நியூசிலாந்து வீரர்கள் பலர் இப்போட்டியில் விளையாடாத நிலையில், தற்போது இவர் பேட்டிங் செய்வாரா என்ற சந்தேகம் நியூசிலாந்து ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
டிம் சவுதிக்கு பதிலாகத்தான் மேட் ஹென்றி இப்போட்டியில் சேர்க்கப்பட்டார். டிம் சவுதியைவிட ஹென்றி வேகமாக பந்துவீசக்கூடியவர். அதுமட்டுமில்லாமல் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சவுதி கிட்டத்தட்ட 200 ஓவர்களுக்கும் மேல் பந்துவீசியுள்ளார். இதனால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இப்போட்டியில் அவருக்கு பதிலாக ஹென்றிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கெரி ஸ்டேட் தெரிவித்தார்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்டீவ் ஸ்மித்துக்கு முன் ஒரு ரன்னுக்கு ஸ்டான்டிங் ஒவேஷன் பெற்ற டிராவிட்!