கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் தங்களது பயிற்சிக்கு திரும்பிவருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், சிஎஸ்கே அணியின் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்யும் புகைப்படம் மற்றும் காணொலியை வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் வாழ்வதற்கு இவர்கள் தான் காரணம்" என்று பதிவிட்டு, அவரது இடது கையில் மனைவி பிரியங்கா மற்றும் மகன் ரியோவின் பெயர்களை பச்சைக் குத்தி எடுத்த புகைப்படம் மற்றும் காணொலியை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, சுரேஷ் ரெய்னா தனது வலது கையில், அவரது மகள் கிரேஷியாவின் பெயரை பச்சைக் குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரெய்னாவின் இந்த பதிவானது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.