இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசிப் போட்டி நாளை மறுநாள் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது. முன்னதாக, வெலிங்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
கோலி, ரஹானே, புஜாரா என சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் அணியில் இருந்தபோதும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 191 ரன்களுக்கும் சுருண்டது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்றால் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்த்து நுட்பமாகப் பேட்டிங் செய்ய வேண்டும் என இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்த்து நாம் இந்த ஷாட்டுகளைத்தான் ஆடப்போகிறோம் என்பதில் இந்திய வீரர்கள் தெளிவாக இருக்க வேண்டும். தெளிவான மனநிலையிருந்தால் மட்டுமே நாம் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும்.
க்ரிஸில் ஒரே இடத்தில் இருந்தால், பவுலரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதுவே, ஃபுட் ஒர்க், க்ரிஸ் இரண்டையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு நுட்பாக விளையாடினால், நல்ல ரன்களைக் குவிக்க முடியும்.
முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் பலவகைகளில் பந்துவீசினர். குறிப்பாக, ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச அவர்கள் புதுவித யுக்திகளைக் கையாண்டனர். அதனால்தான் ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் எங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. வெலிங்டனில் செய்த தவறுகளைத் திருத்திகொண்டு அடுத்த போட்டியில் பொறுப்புடன் விளையாடினால் நிச்சயம் வெற்றிபெறலாம்" என்றார்.
இதையும் படிங்க: கோலியை விரைவில் அவுட் செய்ய திட்டம் இருக்கு - டாம் லாதம்!