இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் 399 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று முன்தினம் (ஜூலை 26) மூன்றாம் ஆட்ட நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து நேற்று நான்காம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13.3 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தபோது, தொடக்க வீரர் கிரேக் பிராத்வெயிட் 19 ரன்களில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் அவுட்டானார்.
இந்த விக்கெட்டின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது பந்துவீச்சாளர் மற்றும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனைகளை ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி கார்ட்னி வால்ஷ், மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரைத் தொடர்ந்து 500 விக்கெட்களை வீழ்த்திய நான்காவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.