இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் வருகிற நவம்பர் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆஸி., அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், அந்த அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பாண்டிங், "கடந்த சில ஆண்டுகளாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவரது பங்களிப்பு அதிகமாக இருந்தது.
அதேசமயம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவரது பங்களிப்பு டெல்லி அணிக்கும் பெரும் உதவியாக அமைந்தது. மேலும் கடந்தாண்டைவிட ஸ்டோய்னிஸ் இம்முறை ஐந்து மடங்கு சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்திவருகிறார்.
எனக்குத் தெரிந்து இனிவரும் காலங்களில் ஸ்டோய்னிஸ் முதல் வரிசை வீரராக களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளன. அது அவரால் முடிந்த ஒன்றே. இப்போதே அவர் பேட்டிங், பந்துவீச்சில் அணிக்கு பலத்தை சேர்த்துவருகிறார். இதனால் இந்திய அணியுடனான தொடரிலும் ஸ்டோய்னிஸ் இதனைச் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நியூ., தொடரிலிருந்து நட்சத்திர பாகிஸ்தான் வீரர் விலகல்!