பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஒராண்டு தடை. அதிலிருந்து மீண்டு வந்தவரை கேலியும் கிண்டலும் செய்து இங்கிலாந்து ரசிகர்கள் அவரை மனதளவில் காயப்படுத்தினார்கள். இந்தத் தடைகளையெல்லாம் வென்று முதல் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அணியை வெற்றிபெறச் செய்தார் ஸ்டீவ் ஸ்மித்.
பின்னர் இரண்டாவது போட்டியில் பவுன்சர் பந்தால் காயம். அதனால், மூன்றாவது போட்டியில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் ஆஸி. அணியில் ரீஎன்ட்ரி தந்த அவர், முதல் இரண்டு போட்டிகளை தூக்கி சாப்பிடும் வகையில் மான்செஸ்டரில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி, டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கம்பேக் இதுதான் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
’மனுசனா இவன்... இப்படி விளையாடுறான்!’ என எதிரணி ரசிகர்களும் பொறாமைப்படும் அளவில் இவரது பேட்டிங் ஃபார்ம் இருக்கிறது. அவரது ஆட்டத்தைப் பார்த்து பிரமித்தாலும், இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஸ்டீவ் மீதான வெறுப்பும் ஒருபுறம் அதிகரிக்காமல் இல்லை.
ஓராண்டு தடையால் இவர் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தாலும், இவரது ஃபார்ம் அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளது. கிரிக்கெட்டின் பிதாமகன் என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய வீரர் பிராட்மேன் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 1930,40களில் இவர் விளையாடியதால், இவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்பது நமக்கு பெரிதாக தெரியாது.
ஆனால், அவரது ஆட்டத்தை நினைவூட்டும் வகையில் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறார். இதுவரை இந்தத் தொடரில் நான்கு இன்னிங்ஸில் விளையாடிய அவர், ஒரு இரட்டை சதம், இரண்டு சதம், ஒரு அரை சதம் என 589 ரன்களை குவித்துள்ளார்.
இதன்மூலம், தொடர்ந்து மூன்று ஆஷஸ் தொடரிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 2015 இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் அவர் 503 ரன்கள் அடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, 2017-18 தனது சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் 687 ரன்களை எடுத்தார். தற்போதைய தொடரில் 589* ரன்கள் குவித்து இன்னும் விளையாடி வருகிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், டான் பிராட்மேன் கூட தொடர்ந்து மூன்றுமுறை 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்க முடியாமல் போனது. அதேசமயம், இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து இரண்டுமுறை 500க்கும் அதிகமான ரன்களை குவித்த வீரர் ஆலென் பார்டனரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆவரேஜ் ஸ்டீவ் ஸ்மித்துக்குதான் உள்ளது. 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 64.64 பேட்டிங் ஆவரேஜுடன், 6788 ரன்களை குவித்துள்ளார்.
அதில் முதல் இன்னிங்ஸை மட்டும் கணக்கிட்டால் ஸ்மித் 16 சதங்கள் உட்பட 3184 ரன்களை குவித்துள்ளார். அதில் இவரது ஆவரேஜ் 93.64, முதல் இன்னிங்ஸில் டான் பிராட்மேனின் ஆவரேஜ் 113.66. இதனால், முதல் இன்னிங்ஸிலும் டானுக்கு அடுத்தப்படியாக ஸ்மித்தான் அதிக ஆவரேஜ் வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நடப்பு ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனிடையே, தான் விட்டுச்சென்ற ஐசிசி தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தையும் மீண்டும் பெற்று கொண்டார். டெஸ்ட் போட்டியில் இவர் மூன்றுமுறை இரட்டை சதத்தை விளாசியுள்ளார். அந்த மூன்றும் ஆஷஸ் தொடரில் அதுவும் இங்கிலாந்து மண்ணில் அடித்தவைதான்.
இதில், ஆச்சரியம் என்னவென்றால் டான் பிராட்மேனை போல இவரும் தனது முதல் இரட்டை சதத்தை கிரிக்கெட்டின் மெக்காவில்தான் (லார்ட்ஸ் மைதானம்) பதிவு செய்தார். டெஸ்ட்டில் இவரது ஆட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், மேல் குறிப்பிட்ட புள்ளி விவரப்படி டானை மிஞ்சிய டானாக திகழ்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.