ஜமைக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்டத் தொடரில் 2-0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. இந்நிலையில், டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில், கடந்த ஓராண்டாக முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் கோலி, 903 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனதால்தான் இந்த சரிவை இவர் சந்தித்துள்ளார்.
அதேசமயம், இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தற்போது 904 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இவர் இரண்டு சதங்கள், ஒரு அரைசதம் என 328 ரன்களை குவித்துள்ளார்.
இதன்மூலம், 2018 ஆகஸ்ட் மாதத்தில் முதலிடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடத்தைப் பிடித்திருந்தார். தற்போது ஓராண்டாக்குப் பிறகு, ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் தனது முதலிடத்தை கோலியிடம் இருந்து தட்டிப்பறித்தார்.
இப்பட்டியலில், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 878 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்திய வீரர் புஜாரா 828 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
அதேசமயம், இப்பட்டியலில் 11ஆவது இடத்தில் இருந்த இந்திய வீரர் ரஹானே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சதம் விளாசியதால் தற்போது நான்கு இடங்கள் முன்னேறி 725 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.