இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இவர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய துருப்புச்சீட்டாக விளங்கினார்.
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த், அங்கீத் சாவன், அஜீத் சாண்டிலியா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இதை விசாரணை செய்த பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவினர் அவர்கள் மீதான குற்றத்தை உறுதிசெய்தனர்.
இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலியா ஆகியோருக்கு எட்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களது தடைக்காலம் இந்தாண்டு மே மாதத்துடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் தடையிலிருந்து மீண்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், கேரளா கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் கேசிஏ கோப்பை டி20 தொடரில் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இத்தகவலை கேரளா கிரிக்கெட் சங்கமும் உறுதிப்படுத்தியது. அதன்படி சச்சின் பேபி தலைமையிலான கேசிஏ டைகர்ஸ் அணியில் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுள்ளதாக கேரளா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
கேரளா கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் கேசிஏ கோப்பை டி20 தொடரானது ஆறு அணிகளுடன், டிசம்பர் 17ஆம் தேதிமுதல் அடுத்த ஆண்டு ஜனவரி 03ஆம் தேதிவரை நடைபெறும் என்றும் கேரளா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பாகிஸ்தானைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு கரோனா!