ஐபிஎல் 2021: கம்பேக் கொடுக்கும் ஸ்ரீசாந்த், எதிர்பார்ப்பை கிளப்பும் ஏலம்! - ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்
ஐபிஎல் 14ஆவது சீசன் வீரர்கள் ஏலம் வருகிற 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 1,097 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவருகிறது. மேலும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்தது.
இதையடுத்து இத்தொடரில் விளையாடுவதற்கான வீரர்கள் பதிவு நேற்று முன்தினம் (பிப். 4) முடிந்தது. இதில், 21 இந்திய வீரர்கள் உள்பட 207 சர்வதேச வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். இணை நாடுகளைச் சேர்ந்த 27 வீரர்கள், ஐபிஎல் விளையாடாத 863 வீரர்கள் என மொத்தம் ஆயிரத்து 97 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து பதிவுசெய்துள்ளனர்.
இதில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்தும் தனது பெயரைப் பதிவுசெய்துள்ளார். ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்ட விவகாரம் தொடர்பாக ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்தது.
கடந்த 7 ஆண்டுகளாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த ஸ்ரீசாந்த், முதல் முறையாக கடந்த மாதம் நடைபெற்ற சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் கேரள அணிக்காக களமிறங்கினார்.
இந்நிலையில், மீண்டும் தற்போது ஐபிஎல் தொடருக்கு கம்பேக் கொடுக்கவுள்ள ஸ்ரீசாந்தின், அடிப்படை ஏலத்தொகை ரூ.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வரவுள்ள ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 100ஆவது போட்டியில் சதமடித்த 9ஆவது வீரர் - ரூட்டின் சாதனை பட்டியல்