வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் டாக்காவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரைக் எர்வின் 107 ரன்கள் அடித்தார். வங்கதேச அணி தரப்பில் அபு ஜாவித், நயீம் ஹசன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 560 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக முஷ்பிகூர் ரஹிம் 203 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதன்பின், 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணி நேற்றைய மூன்றாம் ஆட்டநாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு ஒன்பது ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று தொடங்கிய நான்காம் ஆட்டநாளில் ஜிம்பாப்வே அணி நயீம் ஹசன், தைஜூல் இஸ்லாம் ஆகியோரது சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 57.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே அணியில் கேப்டன் எர்வின் 43, டிமிசென் மருமா 41, சிக்கந்தர் ராசா 37 ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
வங்கதேச அணி தரப்பில் நயீம் ஹசன் ஐந்து, தைஜூல் இஸ்லாம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால், வங்கதேச அணி ஒரு இன்னிங்ஸ், 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இந்தத் தொடரை வென்றது. 15 மாதங்களுக்குப் பின் வங்கதேச அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதன்மூலம், தொடர்ந்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்ததற்கும் வங்கதேச அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இப்போட்டியில் இரட்டை சதமடித்த முஷ்பிகூர் ரஹிம் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார். இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் மார்ச் 1 சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: மோடி இருக்கும்வரை இந்தியா - பாக் உறவில் முன்னேற்றம் இருக்காது - அப்ரிடி