ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையைக் கட்டினர். ஆனால் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்காலம் முடிந்த பின் அணிக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித், நேற்று சூழ்நிலையை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருடன் சிறிது நேரம் ஆடிய டிராவிஸ் ஹெட் 35, பீட்டர் சிடில் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனினும் இறுதிவரை போராடிய ஸ்டீவ் ஸ்மித் 219 பந்தில் 144 ரன்கள் (16 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுக்க உதவினார்.
சர்வதேச அளவில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த 24ஆவது சதமாகும். மேலும் குறைந்த இன்னிங்ஸில் (118) இந்த மைல் கல்லை எட்டும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் கேப்டன் கோலி 123 இன்னிங்ஸில் படைத்த சாதனையை ஸ்மித் தகர்த்துள்ளார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவானான டான் பிராட்மேன் வெறும் 66 இன்னிங்ஸில் 24 சதம் அடித்து முதலிடத்தில் நீடித்துவருகிறார்.
மேலும் ஆஷஸ் தொடரில் ஸ்மித் விளாசிய ஒன்பதாவது சதம் இதுவாகும். இதன்மூலம் எட்டு சதங்கள் விளாசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆர்தர் மாரிஸ், கிரேக் சாப்பல், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் சாதனையையும் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலிலும் டான் பிராட்மேன் 19 சதங்களுடன் முதலிட்டத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.