கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர் வீராங்கனைகள் ஆண்டு மற்றும் மாதங்களின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடும் வீராங்கனைகளுக்கு இதுவரை எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாமலிருந்தது.
இதனிடையே இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி அந்நாட்டு மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடும் 20 வீராங்கனைகளை ஆறு மாதம் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் அதே போன்று 15 வளரும் இளம் வீராங்கனைகளுக்கு மூன்று மாதம் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகளுக்கு மாதாந்திரத் தேவைகளுக்காகப் பணமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீராங்கனைகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். திறமைகளின் அடிப்படையில் தேசிய மகளிர் வீராங்கனைகள் தேர்வுக் குழு அவர்களைத் தேர்வு செய்துள்ளது. எனினும் இந்த அறிவிப்பில் வீராங்கனைகளின் ஊதியம் பற்றி குறிப்பிடப்படவில்லை.
இலங்கை மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அந்த அணி ஒரு போட்டியில்கூட வெற்றிபெறாமல் திரும்பியது. எனினும் தற்போது வெளியாகியுள்ள புதிய செய்தி இலங்கை அணி வீராங்கனைகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.