இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று கல்லேவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்குத் திரும்பினர். இதனால் 135 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கிரௌலி 9 ரன்களிலும், டோமினிக் சிப்லி 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் கேப்டன் ஜோ ரூட் அரைசதம் கடந்தார்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை எடுத்து 127 ரன்களை எடுத்தது. ஜோ ரூட் 66 ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோவ் 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், இது போன்று ஒரு மோசமான பேட்டிங்கை நான் பார்த்ததில்லை என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "நான் இலங்கை அணியின் பயிற்சியாளராக ஒரு வருடமாக இருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு மோசமான பேட்டிங்கை நான் கண்டத்தில்லை. இது முற்றிலும் வீரர்களின் மன அழுத்தத்தினால் ஏற்பட்டது என நினைக்கிறேன். அதனை என்னால் விளக்க முடியவில்லை.
அணியில் உள்ள ஒவ்வொரு பேட்ஸ்மேனும் இத்தவறை ஏற்க வேண்டும். அவர்கள் தங்களைத் தாங்களே குற்றஞ்சாட்டிக் கொள்வதுதான் சரியான முறை" என்றார்.
இதையும் படிங்க: 'அஸ்வின் 800 விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புண்டு' - முத்தையா முரளிதரன்!