இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழந்தவர் அஜந்தா மெண்டிஸ்(34). இவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வு முடிவை நேற்று இரவு அறிவித்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மூலம் அறிமுகமான மெண்டிஸ், கேரம் பால் வகையிலான பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணரடித்தவர்.
இதில் 2008-ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் மெண்டிஸ் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த போட்டியில் இலங்கை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர் ஆவார். இவர் இந்த மைல் கல்லை 19 ஒருநாள் ஆட்டங்களில் நிகழ்த்தி அஜித் அகர்கரின் சாதனையையும் முறியடித்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இருமுறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அதிலும் நான்கு ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
மாயாஜால சுழற்பந்து வீச்சாளரான மெண்டிஸ் இதுவரை இலங்கை அணிக்காக 19 சர்வதேச போட்டிகளில் 70 விக்கெட்டுகளையும், 87 ஒருநாள் போட்டிகளில் 152 விக்கெட்டுகளையும், 39 டி20 போட்டிகளில் 66 (இருமுறை 6 விக்கெட்டுகள் உட்பட) விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.
அடிக்கடி ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.