இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இப்போட்டியில் இளம் வீரர்கள் சுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகினர்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் முகமது சிராஜ் தனது அறிமுக போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம், தனது தந்தையின் கனவை முகமது சிராஜ் நிறைவேற்றியுள்ளதாக அவரது சகோதரர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய இஸ்மாயில், “முகமது சிராஜ் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு. அவர் எப்போதும் சிராஜ் இந்திய அணியில் விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலுடன் இருந்தார். தற்போது சிராஜ் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றதையடுத்து எனது தந்தையின் கனவு நிறைவேறிவிட்டது.
இப்போட்டிக்கு முன்னதாகவே, சிராஜ் இந்திய அணியில் இடம்பெற்ற செய்தியறிந்த அன்று இரவு நாங்கள் தூங்கவில்லை. போட்டியின் போது சிராஜ் எப்போது பந்துவீச வருவார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு சிராஜ் தனது முதல் ஓவரை வீசினார். அது எங்களுக்கு பெருமையான தருணம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த மாதம் சிராஜின் தந்தை முகமது கோஸ் நுரையீரல் பிரச்னை காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க சிராஜிற்கு பிசிசிஐ உதவ முன்வந்தது. ஆனால், சிராஜ் அதனை ஏற்க மறுத்து, இந்திய அணியுடன் பயணிக்க முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி நிதான ஆட்டம்