’பாகிஸ்தான் என்னும் சிறிய நாட்டில் தெருவுக்கு தெரு மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைப்பார்கள்’. இதனை நான் சொல்லவில்லை. இதனை சொல்லியது பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். அவர் சொல்லியதுபோல் இந்த பந்துவீச்சாளரும் தெருவில் இருந்துதான் கிடைத்தார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரத்திற்கு அருகே இருக்கும் மோர்கா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் முகமது அக்தருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் என ஐந்து பிள்ளைகள். அதில் நான்காவது மகனின் பெயர் ஷோயப் அக்தர். மகனைப் படிக்க கல்லூரிக்கு அனுப்பினால், கிரிக்கெட்டில் மட்டும்தான் அவர் கவனம் செலுத்துகிறார்.
அக்தர் வளர வளர ஏழ்மையும் வீட்டில் வளர்ந்துகொண்டே போகிறது. உடன்படிக்கும் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட, அக்தரோ தனியாக வீட்டின் அருகிலிருக்கும் மலைப்பகுதிகளில் நேரத்தை செலவிடுகிறார். சில நாட்களில் மலைகள்தான் அவருக்கு நண்பனாக மாறுகிறது. எப்படி நண்பன் என்றால், தனது பந்துவீச்சு பயிற்சியை மலைகளில் கிடைத்த கற்களால் மேற்கொள்கிறார்.
இந்த கிரிக்கெட் ஆர்வம் எதுவரை செல்கிறது என்றால், கிரிக்கெட்டிற்காக படிப்பை விடும் அளவுக்கு. பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் கிரிக்கெட் அணிக்கு ஆடுவதற்காக வீரர்களின் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் பங்கேற்க பணமின்றி பேருந்தின் மேல் அமர்ந்து அந்த இடத்திற்கு சென்றார். அந்த அளவிற்கு கிரிக்கெட் வெறி அக்தருக்கு. அப்போது அவருக்கு தெரிந்திருக்காது; பின்னாட்களில் உலகமே ஆச்சரியப்படும் இவரின் வேகமான பந்துகளை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள் என...
பின்னர் நடைபெற்ற சில உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து அக்தர் வெளிநாடுகளில் ஒரு முறை கேரி கிரிஸ்டன் தலைமை தாங்கிய அணிக்கு எதிராக நான்கு நாட்கள் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆடினார். அப்போது கேரி கிரிஸ்டனுடன் அவர் பேசிய வார்த்தைகள் இவை:
அக்தர்: நான் வக்கார் யூனிஸ் போல் வருவேன் என நினைக்கிறீர்களா? (அப்போது அவர் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை)
கிரிஸ்டன்: வருவாய்
அக்தர்: எனக்கு அந்த திறமை இருக்கிறதா?
கிரிஸ்டன்: இருக்கிறது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களில் வக்கார் யூனிஸும், வாசிம் அக்ரமும் தனியாக ஒரு பாணியை அமைத்து சர்வதேச பேட்ஸ்மேன்களை திணறடித்துவந்தனர். இறுதி ஓவரில் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி; கையில் மூன்று விக்கெட்டுகள் இருக்கிறது என்றாலும் சரி. பந்தை அக்ரமோ, அல்லது வக்கார் யூனிஸோ வீசுகிறார்கள் என்றால் பயம் நிச்சயம் பேட்ஸ்ன்மேன்களுக்குதான். ஏனென்றால் இவர்களின் யார்க்கர்களுக்கு பலியாகாத சர்வதேச பேட்ஸ்மேன்கள் இல்லை என்ற நிலை இருந்தது.
அதனால் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரமை தனது ரோல் - மாடல்களாக எடுத்துக்கொண்டார் அக்தர். பின்னர் சரியாக 1997ஆம் ஆண்டு, சொந்த ஊரான ராவல்பிண்டி மைதானத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிறார். ஆனால் அக்தரின் தொடக்க கால கிரிக்கெட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கிட்டத்தட்ட 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அப்போது அவரது பந்துவீச்சில் பெரிய வேகமும் இல்லை.
பின்னர்தான் புயலின் மறுபக்கம் வெளிவந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கரகோஷத்தில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்திவருகின்றனர். இந்தியாவின் சுவர் டிராவிட் ஆடிக்கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் அக்தர். வெறும் 8 டெஸ்ட் போட்டிகளை ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதாரண வீரர். டிராவிட்டோ 93 பந்துகளில் 24 ரன்கள் அடித்து மிகச்சிறந்த அடித்தளத்தை போட்டு விளையாடுகிறார்.
அப்போது அக்தர் தனக்கே உரிய பவுண்டரி லைன் எல்லையிலிருந்து இருந்து ஓடிவருகிறார். மிக வேகமாக வந்த அக்தர், அதனைவிட வேகமாக ஒரு இன்ஸ்விங்கர் யார்க்கரை டிராவிட்டிற்கு வீச, பந்து லெக் ஸ்டெம்பில் அடித்து பறக்கிறது. இந்திய ரசிகர்களின் கரகோஷத்தை ஒரே பந்தில் அடக்கினார். ஆனால் அதனையடுத்து சச்சின் என்னும் சாகசக்காரன் களமிறங்கியவுடன் மீண்டும் ரசிகர்களின் கரகோஷத்தில் உயரம் ஏற்படுகிறது. அப்போது சச்சின் இளம் வீரர் அக்தரை எதிர்கொள்ள தயாராகிறார்.
மீண்டும் அதேபோன்ற ஒரு ஓட்டம். அதே போன்ற ஒரு இன் ஸ்விங்கர் யார்க்கர். நடந்ததும் அதே போன்ற விக்கெட்தான். ஆனால் இம்முறை சச்சின் என்னும் ஜாம்பவான். அக்தரின் பந்துக்கு பதிலளிக்க முடியாமல் சச்சின் போல்டாகி வெளியேறுகிறார். பந்து மிடில் ஸ்டெம்பை பதம் பார்த்து அப்படியே சாய்கிறது. சச்சின் அதனைத் திரும்பி பார்க்காமல் செல்கிறார்.
அதற்கு முன்னதாக யாரேனும் அடுத்தடுத்த பந்துகளில் டிராவிட், சச்சின் என இரண்டு ஜாம்பவான்களை வீழ்த்துவீர்களா எனக் கேட்டால் அதற்கு பதிலளிக்க நிச்சயம் யோசனை செய்திருப்பார்கள். அதனை அக்தர் என்னும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் செய்தது.
அங்கே தொடங்கிய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸின் பயணம் யாருக்காகவும் எப்போதும் நிற்கவில்லை. 2002ஆம் ஆண்டு, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தங்கள் பக்கம் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டாக டீல் செய்தார். அதிலும் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் 59 ரன்களுக்கு ஆல் அவுட். நிச்சயம் வெற்றி ஆஸ்திரேலியாவுக்குதான். ஆனால் துன்பங்களின்போது வீரர்கள் மாவீரர்கள் ஆகிறார்கள். அப்போது அக்தரின் மன உறுதி வெளிப்பட்டது. ஆஸ்திரேலியாவின் ஹெய்டன், கில்கிறிஸ்ட், ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், பாண்டிங் என ஜாம்பவான்களை அசரடித்தது எல்லாம் அக்தரால் மட்டுமே முடிந்த ஒன்று.
இன் ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர், பவுன்சர், வேகம், யார்க்கர், ஸ்லோயர் பால் என வேகப்பந்துவீச்சாளர்களின் அனைத்து மந்திரங்களையும் கரைத்து குடித்து தேர்ச்சி பெற்றவர் அக்தர். கங்குலி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் அக்தரிடம் எளிமையாக விக்கெட்டை கொடுத்துவிட்டு செல்வார்கள். முதன்முறையாக ஸ்லோ - பால்களை சிறப்பாக பயன்படுத்தி இங்கிலாந்து அணியின் ஆணி வேரை அசைத்துப் பார்த்தவர் அக்தர். ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் போன்ற வீரர்களை எவ்வாறு விக்கெட் வீழ்த்தலாம் என ப்ளு ப்ரிண்ட் போட்டுக்கொடுத்தது அவர் மட்டுமே. இன்றும் வேகம் என்றால் அக்தர் மட்டுமே என உலகமே பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் ஒவ்வொரு வருடமும் பேட்ஸ்மேன்களுக்கு என பல்வேறு மாறுதல்களை பெற்று வரும் நிலையில் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய மாறுதல்களை பெறாமல் ஆடப்பட்டுவருகிறது. அதே பந்துதான் ஆனால் பந்துவீச்சாளர்கள் வேறுபாடுகளை கண்டறிந்து விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.
அக்தரிடம் ஏன் வேகப்பந்துவீச்சாளராக கிரிக்கெட் ஆடத் தொடங்கினீர்கள் எனக் கேட்டால், ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஒரு பந்தை வீசி, அந்த பந்து ஸ்டெம்பில் பட்டு அந்த சத்தத்தைக் கேட்டால், நீங்களும் வேகப்பந்துவீச்சாளராக வேண்டும் என்பீர்கள் என்றார். ஒரு வேகப்பந்துவீச்சாளனுக்கு அந்த ருசி தெரிய வேண்டும். அப்போதுதான் அவன் இன்னும் சிறப்பாக வீசுவான் எனக் கூறினார்.
இவரின் பந்தில் பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட் பறக்கும், உடலில் அடிபடும்; ஏன் தலையில் காயம் ஏற்படும். ஆனால் உண்மையில் அதனை வேண்டுமென்று அக்தர் செய்யமாட்டார். உண்மையில் அதனைத் தடுக்கதான் பேட்ஸ்மேன்கள் பேட்டை வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் கண் இமைக்கும் வேகத்தில் பந்து கிராஸ் செய்துவிடும் என்பதால் காயம் ஏற்படுகிறது.
பாகிஸ்தான் அணியினருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாததை கிண்டலடிக்கும் நமது நாட்டில் பாகிஸ்தானால் உருவாக்க முடிந்த வேகப்பந்துவீச்சாளர்கள் அளவிற்கு உருவாக்க முடியவில்லை. 150 விக்கெட்டுகளை வீழ்த்திய அனைத்து சிறந்த பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொண்டாலும், அவர்களுடையெ ஸ்ட்ரைக் ரேட்டைக் கணக்கிட்டால் அக்தர் நிச்சயம் முதல் ஐந்து இடங்களில் வருவார். 46 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகள், 163 ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகள் என எவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், அவர் பந்துவீச வந்தால் பேட்ஸ்மேன்களின் மனதில் ஒரு பயம் ஏற்படும். அந்த பயம்தான் அக்தர் என்னும் பெயர் செய்த சாதனை.
அந்த சாதனையை தகர்க்க மீண்டும் ஒரு அக்தர்தான் வர வேண்டும். ஆனால் அவராலும் முறியடிக்க முடியாத இன்னொரு சாதனை இருக்கிறது. அது 161kmph வேகத்தில் ஒரு பந்தை வீச வேண்டும். அதுவும் வச்ச குறி தவறாமல் பேட்ஸ்மேனின் போல்ட்டை சிதறடிக்க வேண்டும்.
அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் காயம்தான் மிகப்பெரும் வலி. காயத்தால் அணியிலிருந்து தொடர்ந்து விளையாடாமல் இருந்தவர். அதனால்தான் அக்ரமை போல் மிகப்பெரும் உயரத்தை அவரால் அடைய முடியவில்லை. ஆனால் அக்தர் விட்டுச் சென்ற சாதனைகளும், நினைவுகளும், பயமும் இன்னும் அப்படியேதான் உள்ளது. பிறந்தநாள் வாழ்த்துகள் அக்தர்..! #HappyBirthdayAkhtar