இந்தியா - பாகிஸ்தான் என்றாலே எப்போதும் முரண்பாடான கருத்துகள் இருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இது அரசியலில் மட்டுமல்லாது விளையாட்டிலும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது தொடங்கி பாகிஸ்தான் பிரதமர் முதல் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்தியாவை விமர்சிக்கும் விதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஷிகர் தவானிடம், இந்தியா குறித்த பாகிஸ்தான் வீரர்களின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தவான், ‘யாரேனும் எங்கள் நாட்டைப் பற்றி பேசினால் கண்டிப்பாக நாங்கள் அதை எதிர்ப்போம். எங்களுக்கு வெளிநாட்டவரின் அறிவுரைகள் தேவையில்லை.
இந்தியா மீது கருத்து கூறுபவர்கள் முதலில் அவர்கள் நாட்டில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார். மேலும் இதற்கு உதாரணமாக 'கண்ணாடி வீடு வைத்திருப்போர், பிறர் வீடுகளின் மீது கல்லை எறியக்கூடாது' என்ற பழமொழியையும் அவர் குறிப்பிட்டார்.